தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாக செயல்படுகிறது - ப.சிதம்பரம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாக செயல்படுகிறது
ப.சிதம்பரம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துடன் ஒப்பிட்டால் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாக செயல்படுகிறது என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள் குறைவாக இருக்கும் நிலையில், அவர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் தேர்வு நடத்துவதில் சிரமங்கள் உள்ளதாகவும், இதன் காரணமாக வினாத்தாள் கசிவு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பு தேசிய அளவில் மூன்றாவது அணியாக உருவாகுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த சிதம்பரம், அதுபற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். எனினும், நாடு முழுவதும் அரசு பள்ளிகளின் நிலை குறித்து அந்த அமைப்பினர் ஆய்வு செய்து வருவதால் ஆட்சியில் இருப்பவர்கள் விழித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அசாம் மாணவர் சங்கப் போராட்டத்திற்குப் பின்னர் அசாம் கண பரிஷத் கட்சி ஆட்சியைப் பிடித்ததையும், நேபாளத்தில் ஜென்சி தலைமுறையினர் போராட்டத்தின் மூலம் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பிரதமரானதையும் ப.சிதம்பரம் உதாரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகம் சட்டமன்றம் குறித்து பதில் அளித்த அவர்,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பிற உறுப்பினர்கள் பேசுகின்றனர்; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பதில்லை; அமைச்சர்களின் பதிலுரை இல்லை என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com