தமிழக டிஜிபி நியமன விவகாரம்; யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஓய்வு பெற்றார்.
தமிழக டிஜிபி நியமன விவகாரம்;  யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Published on

மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் சார்பில் வக்கீல் எஸ். பிரசன்னா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “டி.ஜி.பி.யை தேர்வு செய்ய மாநில அரசுகள் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பே பெயர் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். யாரையும் தற்காலிக டி.ஜி.பி.யாக நியமிக்கக்கூடாது என்று கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி ஓய்வுபெற்றதை தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு டி.ஜி.பி. பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பி வைக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை வேண்டுமென்றே மீறுவதாக உள்ளது. எனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டி.ஜி.பி. பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு யு.பி.எஸ்.சி.க்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், யு.பி.எஸ்.சி. தேர்வுக் குழு 2 வாரங்களுக்குள் அடுத்த டி.ஜி.பி.க்கான பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 12-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

யு.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல், தெலுங்கானா டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான கூட்டம் மார்ச் 11-ந்தேதி நடைபெற்றது. குஜராத் டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான கூட்டம் மார்ச் 19-ந்தேதியும், தமிழ்நாடு டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான கூட்டம் மார்ச் 20-ந்தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி. வில்சன், முகுல் ரோத்தகி ஆகியோர், அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்ததுடன், தமிழ்நாடு டி.ஜி.பி.யை தேர்வு செய்யும் கூட்டத்தை தாமதமின்றி நடத்தி, பெயர் பட்டியலை விரைந்து தமிழ்நாடு அரசுக்கு யு.பி.எஸ்.சி. வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com