குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - நிதி மந்திரிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

விவசாயிகள் துயர் துடைப்பதற்கும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற நிதி மந்திரிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் - நிதி மந்திரிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் ஜூலை 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் அறிக்கை தயாரிப்பது குறித்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவருடன் நிதித்துறை செயலாளர் சண்முகம், துணைச்செயலாளர் எச்.கிருஷ்ணன் உன்னி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

நாடு கடுமையான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதனுடைய தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பருவமழை பொய்த்தது, தட்பவெப்ப நிலை மாற்றங்கள், மாநிலங்கள் இடையே தீர்க்கப்படாத நதிநீர் பிரச்சினைகள் மற்றும் வேகமாக குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளன.

வறட்சியால் பாதிக்கப்பட கூடிய தமிழகம் போன்ற மாநிலங்கள் பயன்பெற தக்கவாறு, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதன் மூலமும் நீர் சேகரிப்பை மேம்படுத்த பெருவாரியான மக்கள் பங்கேற்க கூடிய வகையில் தூய்மை இந்தியா திட்டம் போன்ற ஒரு திட்டத்தை கணிசமான நிதி ஆதாரங்களோடு அறிமுகப்படுத்தலாம்.

மாநிலங்களின் பாசன அமைப்புகளை நவீனப்படுத்திடவும், நதிநீர் வடிகால் அணுகுமுறை மூலம் நீடித்த நீர் மேலாண்மையை உறுதி செய்யவும் அவசிய தேவை எழுந்துள்ளது. இதற்காக ஹர் கேத் கோ பாணி திட்டத்தின் கீழ் நிதி ஆதாரங்களை கணிசமாக உயர்த்த வேண்டும்.

பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ், வறட்சிக்குள்ளாகும் பகுதிகளில் பாசன அமைப்புகளை மேம்படுத்தி விவசாயிகளின் துயர் துடைப்பதற்கும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும், மராட்டிய மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்தது போல் தமிழக அரசுக்கும் ஒரு சிறப்பு தொகுப்பு நிதியாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ரூ.17 ஆயிரத்து 600 கோடி செலவில் பெரிய அணைக்கட்டு கால்வாய் அமைப்பை நவீனப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசின் நிதி உதவி கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தில் உரிய ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுவதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து, தேவையான நிதி ஒதுக்கீடுகளை இந்த வரவு- செலவு திட்டத்தில் (பட்ஜெட்) மேற்கொண்டு பணிகளை தொடங்க வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் நீடித்த குடிநீர் வழங்கல் திட்டத்தை மேம்படுத்திட மத்திய அரசின் பங்களிப்பை உயர்த்திட வேண்டப்படுகிறது. தமிழ்நாட்டில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்க்கவும், தட்பவெப்ப மாறுதல்களை தாங்கி நிற்கும் வகையிலான 2 லட்சம் கூடுதல் வீடுகளை கட்டிடவும், பிரதம மந்திரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் கோடியை மத்திய அரசு கூடுதல் ஒதுக்கீடாக தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

பிரதம மந்திரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ், ஒரு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு அனுமதித்துள்ள தொகை ரூ.1.2 லட்சம் போதுமானதாக இல்லை. இதனை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டி இருக்கிறது. எனவே பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் போன்ற இதர மத்திய அரசு ஆதரவு திட்டங்களை போன்று இதற்கும் மத்திய அரசின் பங்கினை 60:40 என்று உயர்த்திட வேண்டும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் நிலை-1 திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைக்கேற்ப மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவாக்கம் செய்து மெட்ரோ ரெயில் திட்டம் நிலை-2-க்கு ஒப்புதல் செய்ய மத்திய அரசினை மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு விரைவில் அனுமதி வழங்கி, எதிர்வரும் வரவு-செலவு திட்ட உரையில் இதற்கான அறிவிப்பு வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.

மானிய கோரிக்கை எண் 40-ல் (நிதி அமைச்சகம்) உள்ள பிற மானியங்கள், கடன்கள், இடமாற்றங்கள் என்ற பிரிவின் கீழ் மத்திய வரவு-செலவு திட்டத்தில் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு தற்காலிக மானியம் வழங்குவார்கள் என நம்புகிறேன்.

சரக்கு மற்றும் சேவை வரியை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழகம் முழுமனதுடன் ஆதரவு அளித்துள்ளது. 2017-2018-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில் நிலுவை தொகை ரூ.4 ஆயிரத்து 458 கோடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை நிலுவைத்தொகை வழங்கும் நிகழ்வில், முந்தைய ஆண்டின் இறுதி நிலுவைத்தொகையை அடுத்த ஆண்டின் தொடக்க நிலுவை தொகையாக எடுத்துக்கொள்ள நான் பரிந்துரைக்கிறேன். இதனால் நிலுவை தொகை மாநிலங்களுக்கு ஒரு தெளிவான முறையில் முறையாக தீர்க்கப்படலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com