

சபரிமலை,
மண்டல பூஜை சீசன் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. நாளொன்றுக்கு 2 லட்சம் டின் அரவணை தயாரிப்பு, ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு எனப் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளன.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல கால யாத்திரை நவம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அரவணை பிரசாதம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேவசம் போர்டு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரவணை தயாரிப்பு மையம் நவம்பர் 3 அல்லது 4-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மண்டல கால யாத்திரையை முன்னிட்டு, 50 முதல் 60 லட்சம் டின் அரவணையை முன்கூட்டியே இருப்பு வைக்க தேவசம் போர்டு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அரவணை தயாரிப்புப் பணிகள் தற்போது இரவு, பகல் என 24 மணி நேரமும் நடைபெற்று வருகின்றன. அரிசி மற்றும் வெல்லம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்படும் இந்தப் பிரசாதம், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்காக மற்றொரு முக்கிய அறிவிப்பையும் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.யுடன்) இணைந்து புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, யாத்திரைக் காலத்தில் சபரிமலையில் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான முழு பிரீமியம் தொகையையும் தேவசம் போர்டே ஏற்கும் என அதன் தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான பிரீமியம் தொகை தேவசம் போர்டின் நல நிதியில் இருந்து செலுத்தப்பட உள்ளது.
நடப்பு யாத்திரைக் காலத்தில் இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்காக சுமார் ரூ.1 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காகப் பக்தர்கள் தனியாக எந்தப் பிரீமியமும் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் விர்ச்சுவல் கியூ முன்பதிவின்போது, பக்கதர்களின் பெயர் மற்றும் அவருடனான உறவு குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு இதுபோன்ற ஆயுள் காப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் தேவசம் போர்டு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் வரவேற்பு மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், சபரிமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நவம்பர் 10-ம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரவணை தட்டுப்பாடின்றி கிடைக்க உற்பத்தி அதிகரிப்பு, பக்தர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு, அடிப்படை வசதிகள் மேம்பாடு என இந்த ஆண்டு சபரிமலை யாத்திரைக்காகப் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது திருவிதாங்கூர் தேவசம் போர்டு.