மாணவன் தலையை மத்தளமாக மாற்றி ரீல்ஸ் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மாணவன் தலையை மத்தளமாக மாற்றி ரீல்ஸ் செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்
தினேஷ் குமார்
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் உள்ள சைபாய் பிளாக்கில் இயங்கி வரும் அரசு ஆரம்ப பள்ளியில் தினேஷ் குமார் மாத்தூர் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்க, மாணவர்கள் கீழே தரையில் அமர்ந்திருந்தனர். அப்போது, குடும்பத்தில் நேரிட்ட துக்கம் காரணமாக தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருந்த ஒரு சிறுவனை தனக்கு முன்னால் தினேஷ் குமார் அமர வைத்தார்.

தலையில் மத்தளம் வாசித்த கொடுமை

அதனை தொடர்ந்து, தனது மொபைல் போனில் தபேலா இசையை ஒலிக்கவிட்ட அந்த ஆசிரியர், பாடகர் போலபாவித்துக் கொண்டு, மெய்மறந்து அந்த சிறுவனின் மொட்டையடித்த தலையை மத்தளத்தை போல இரு கைகளாலும் வேகமாக தட்டி வாசித்துள்ளார். இதனை பார்த்து வகுப்பறையில் இருந்த மற்ற குழந்தைகளும் சிரித்துள்ளனர். இந்த செயலை அந்த ஆசிரியரே வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோ

பாடம் கற்பிக்க வேண்டிய வகுப்பறையிலேயே மாணவனை துன்புறுத்தி, அதனை தனது சமுக வலைதள பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது.

சஸ்பெண்ட் நடவடிக்கை

சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆசிரியரின் இந்த ஒழுங்கீனமான மற்றும் மாணவனின் கண்ணியத்தை குறைக்கும் செயலை கண்டித்து, ஆசிரியர் தினேஷ் குமார் மாத்தூரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com