குழந்தைகளின் செயல்பாடுகள், அன்றாட வாழ்வு ஆகியவற்றில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் ; பிரதமர் மோடி அறிவுறுத்தல்

குழந்தைகளிடையே விளையாட்டு, உடற்பயிற்சி, படைப்பாற்றல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் அதிக அளவில் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் செயல்பாடுகள், அன்றாட வாழ்வு ஆகியவற்றில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் ;  பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பிரதமர் மோடி
Published on

புது டெல்லி,

குழந்தைகளின் செயல்பாடுகள், அன்றாட வாழ்வு ஆகியவற்றில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் ; பிரதமர் மோடி அறிவுறுத்துயுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 82 ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுடெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

82 ஆசிரியர்கள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள மூன்று முக்கிய துறைகளில் இருந்து மொத்தம் 82 ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையைச் சேர்ந்த 48 ஆசிரியர்களும், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 21 பேராசிரியர்களும், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் 13 திறன் பயிற்சியாளர்களும் அடங்குவர்.

ஆசிரியர்கள் பகிர்ந்த அனுபவம்

பிரதமருடனான இந்த சந்திப்பின் போது, விருது பெற்ற ஆசிரியர்கள் தங்களது கல்விப்பணி பயணத்தில் எதிர்கொண்ட சுவாரஸ்யமான மற்றும் சவாலான அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தனர். குறிப்பாக, வகுப்பறையில் மாணவர்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கவும், கற்றலை மேலும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காக தாங்கள் கையாண்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகள் குறித்து பிரதமரிடம் அவர்கள் விரிவாகப் பகிர்ந்துகொண்டனர்.

கூட்டு குடும்பங்கள் குறைந்துவிட்டன

தற்போதைய காலகட்டத்தில் நமது பாரம்பரிய கூட்டு குடும்ப அமைப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, குழந்தைகளின் ஒட்டுமொத்த வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு முன்பை விட இப்போது பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, குழந்தைகளின் கல்விசார் செயல்திறனை மட்டும் பார்க்காமல், அவர்களின் அன்றாட செயல்பாடுகளையும் ஆசிரியர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

செல்போன் மோகம்

இன்றைய சூழலில் குழந்தைகள் மின்னணு சாதனங்களின் திரைகளிலேயே எப்போதும் மூழ்கி இருப்பது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. குழந்தைகள் நள்ளிரவிலும் தொடர்ந்து கைபேசிகளை பயன்படுத்துகிறார்களா, திரைகளில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பது குறித்து ஆசிரியர்கள் அவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து பேச வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி மற்றும் படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்ப்பதன் மூலமே, குழந்தைகளை இந்த செல்போன் மோகத்தில் இருந்து படிப்படியாக மீட்க முடியும்.

போதைப்பொருள் விழிப்புணர்வு

சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பிரச்சனை குறித்தும் பிரதமர் கவலை தெரிவித்தார். குழந்தைகளிடம் திடீரென ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் அந்த தவறான பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

வகுப்பறைக்கு வெளியே நிஜ உலகம்

குழந்தைகளை வகுப்பறைக்குள்ளேயே அடைத்து வைக்காமல், வெளி உலகிற்கு அழைத்து சென்று நிஜ உலக திறன்களுடன் அவர்களை இணைக்க வேண்டும். பாடப்புத்தக அறிவை புகட்டுவதோடு நின்றுவிடாமல், உழைப்பின் மாண்பு போன்ற உயரிய விழுமியங்களையும், அவர்களின் களங்கமற்ற தன்மையையும் பாதுகாப்பது ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தை வளர்த்து, சரியான வழியில் கொண்டு சென்றால் அவர்களின் வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com