

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மியாபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சிந்துஜா (வயது 36). சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு இவருக்கு திருமணமானது. ஆனால் குடும்பத்தகராறில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார்.
அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த சிந்துஜா, நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு செல்லவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து அவரது நண்பர் ராஜ்ரெட்டி என்பவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது மினிவிசிறியில் தூக்குப்போட்டு சிந்துஜா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மேலும் தனது சொத்துக்களை ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்து விடுமாறு சிந்துஜா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றும் அங்கு இருந்தது. பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்.