

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கோடங்கல் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டம் நடந்தது.
அதில், அம்மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு வாக்கு திருட்டில் ஈடுபடுகிறது. மராட்டியம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகளை நீக்கி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது.
அதே வஞ்சகமான தந்திரத்தை தெலுங்கானாவிலும் கடைப்பிடிக்க பார்க்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம், காங்கிரசுக்கு ஆதரவான பட்டியல் இனத்தினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் வாக்குகளை நீக்க குறிவைத்துள்ளது. அதை நாங்கள் மவுனமாக வேடிக்கை பார்க்க மாட்டோம். காங்கிரஸ் ஆதரவு வாக்குகளை நீக்க எதிர்ப்பு தெரிவிப்போம்.
அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுதுறை போன்றவற்றை அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய பாஜக, ஏழை மக்களின் வாக்குகளை நீக்க சிறப்பு தீவிர திருத்தத்தைப் பயன்படுத்துகிறது
இவ்வாறு அவர் பேசினார்.