

ஐதராபாத்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை அரசு ஊடகங்கள் வெளியிட்டு உள்ள செய்தி உறுதிப்படுத்தி உள்ளது.
இதில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது
இந்த நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், காமேனி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஈரான் சமூகத்தினர் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
அப்போது பேரணியாக சென்றவர்களில் ஒருவர் கூறும்போது, மனித இனத்திற்கும், அமைதிக்காகவும் பாடுபட்டவர் காமேனி. அவரை நாங்கள் நேசித்தோம். ஒரு தலைவராக அவரை பார்க்க ஆசைப்பட்டோம். அவர் ஒரு நல்ல தலைவர். அவரை நாங்கள் இழந்து விட்டோம். அதற்கு கண்டனம் தெரிவிக்கவே கூடியுள்ளோம் என கூறினார்.
எந்த வகையிலும் போர் சரியாக இருக்காது. வரலாற்றை நாங்கள் பார்த்த வரை, எனக்கு தெரிந்து, இதுபோன்ற சூழல்களில் ஈரான் ஒருபோதும் போரில் ஈடுபட்டதில்லை என அந்த பெண் கூறினார். இதேபோன்று மவுலானா ஹன்னான் ரஜ்வி என்பவர் கூறும்போது, மாற்று மதத்தினரும் கூட பேரணியில் இணைந்தனர். ஈரானுக்கான ஆதரவை வெளிப்படுத்தினர் என கூறினார்.