டெலிகிராம் மீண்டும் இயங்கத் தொடங்கியது... பயனர்கள் நிம்மதி!

நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில் டெலிகிராம் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம்
Image Credits: AI
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அளித்த பரிந்துரையின் பேரில், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ஆம் தேதி வரை மத்திய அரசு தற்காலிக தடை விதித்தது.

டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

டெலிகிராம் செயலியை முழுமையாக பயன்படுத்த முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டதுடன், பயனர்கள் அனுப்பிய செய்திகளை திருத்தும் (எடிட்) வசதியையும் ஜூன் 30-ஆம் தேதி வரை முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் டெலிகிராம் பயனர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்

இந்த நிலையில், நீட் மறுதேர்வு நேற்று நடைபெற்றுத் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, டெலிகிராம் மீதான தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், டெலிகிராம் செயலி மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், டெலிகிராம் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com