பீகாரில் திடீரென தீப்பிடித்து எரிந்த துர்கா பூஜை பந்தல்கள்- பதற்றம்

மர்ம நபர்கள் பந்தல்களுக்கு தீ வைத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.
தீ விபத்து
Published on: 

பாட்னா,

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் துர்கா பூஜை பந்தல்கள் இன்று அதிகாலையில் தீப்பற்றி எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

வட மாநிலங்களில் துர்கா பூஜையையொட்டி பல்வேறு இடங்களில் துர்கா சிலைகளை நிறுவி, சிறப்பு பூஜைகள் செய்ய தயாராகி வருகின்றனர். இதற்காக பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் புலாகிபூர் நகரில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு துர்கா பூஜை பந்தல்கள் இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மர்ம நபர்கள் இந்த பந்தல்களுக்கு தீ வைத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததுடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.

அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் மத ரீதியான பின்னணி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். எனினும், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரமாண்ட பந்தல்கள்

வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா துர்கா பூஜை என்ற பெயரில் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மேற்கு வங்காளம், டெல்லி, ஜார்க்கண்ட், பீகார், ராஜஸ்தான், குஜராத் போன்ற வடமாநிலங்களின் முக்கிய நகரங்களில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில் துர்கா சிலைகள் நிறுவப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. அமெரிக்க வைரங்கள், பாரம்பரிய களிமண் மற்றும் பல்வேறு புதுமையான கலைப் பொருட்களைக் கொண்டு துர்கா தேவி சிலைகள் பிரமாண்டமாகச் செய்யப்படுகின்றன.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அம்பிகையை வழிபடும் விதமாக இரவு நேரங்களில் வண்ணமயமான கர்பா மற்றும் தாண்டியா நடனங்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். வழிபாட்டிற்குப் பிறகு, விஜயதசமி நாளில் துர்கா தேவியின் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com