பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்


பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்
x
தினத்தந்தி 2 May 2025 8:40 AM IST (Updated: 2 May 2025 9:08 AM IST)
t-max-icont-min-icon

பஹல்காம் தாக்குதல் வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் பலியானார்கள். அந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் தங்கி இருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது.

பஹல்காம் தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனையடுத்து, முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நேரத்தில், எந்த இலக்கு மீது தாக்குதல் நடத்துவது என்பதை முடிவு செய்ய முப்படைகளுக்கு முழு அதிகாரம் இருப்பதாக கூறினார். இதனால், பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, முறைப்படி இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையில் எடுத்துக்கொண்டது. என்.ஐ.ஏ.வின் ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கண்காணிப்பில் பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. தாக்குதலை நேரில் பார்த்த சாட்சிகளிடமும் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் தாக்குதல் சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். அவர்களையும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தகவல்களை திரட்ட பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் நாடு முழுவதும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அங்கு அவர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தற்போதும், தெற்கு காஷ்மீரில் தங்கியிருப்பதாக என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சந்தேகிக்கப்படும் நபர்கள், சுற்றுலா கைடுகள், பஹல்காம் பகுதியில் வசிக்கும் மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story