மராட்டிய மாநிலத்தில் டெட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி தலைமறைவு - மனைவி கைது

பிஜேந்திர குப்தாவின் மனைவி சுமன் பெயரில் பல்வேறு பணப்பரிமாற்றங்கள் நடந்துள்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் டெட் தேர்வு வினாத்தாள் கசிவு: முக்கிய குற்றவாளி தலைமறைவு - மனைவி கைது
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான பிஜேந்திர குப்தா தலைமறைவான நிலையில், அவரது மனைவி சுமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வினாத்தாள் கசிவு

மராட்டிய மாநிலத்தில் கடந்த ஜூன் 28-ந்தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட் தேர்வு) நடைபெற இருந்தது. இதற்கிடையில், தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்துவிட்டதாக தானே மாவட்டத்தின் பிவண்டி நகர காவல்துறைக்கு 27-ந்தேட்ய்ஹி காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் பிவண்டி நகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சில நபர்களிடம் இருந்து வினாத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வினாத்தாள்களை உயர்மட்ட ஆய்வுக்கு அனுப்பியபோது, அவை அசல் வினாத்தாள்களுடன் ஒத்துப்போனதாக போலீசாருக்கு தெரியவந்தது.

தேர்வு ஒத்திவைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், நாளை நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மராட்டிய மாநில தேர்வுக் குழு அறிவித்துள்ளது. தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வினாத்தாளை கசியவிட்டதாக பிவண்டியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். வேறு இடத்தில் அச்சிடப்பட்ட வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவை கசியவிடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

முக்கிய குற்றவாளியின் மனைவி

அதே சமயம், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிஜேந்திர குப்தா தற்போதுவரை தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடு வருகின்றனர். இதற்கிடையில், பீகாரில் தங்கியிருந்த பிஜேந்திர குப்தாவின் மனைவி சுமன், போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள்களை கசியவிட்டு பிஜேந்திர குப்தா கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை கொண்டு டெல்லி, பாட்னா உள்ளிட்ட நகரங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், வினாத்தாள்களை கசியவிட்டு பிஜேந்திர குப்தா பணம் சம்பாதித்து வந்தது குறித்து அவரது மனைவி சுமனுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது என்றும், அவரது பெயரில் பல்வேறு பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்றும் போலீசார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சுமனை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், கோர்ட்டு உத்தரவின்படி வருகிற 6-ந்தேதி வரை அவரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com