நாட்டின் பால் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 247 மில்லியன் டன்னாக உயர்வு

பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2026 அக்டோபர் 31 நிலவரப்படி நாளொன்றுக்கு 690.90 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பால் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 247 மில்லியன் டன்னாக உயர்வு
பால் உற்பத்தி
Published on: 

புது டெல்லி,

நாட்டின் பால் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் 247 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

நான்கில் ஒரு பங்கு பால் உற்பத்தி

இந்தியாவின் ஊட்டச்சத்து மேம்பாடு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உயர்தர புரதம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பால், அனைத்து வயதினரின் ஆரோக்கியத்திற்கும் துணைபுரிகிறது. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக திகழும் இந்தியா, உலகளாவிய பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

2014-15 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் பால் உற்பத்தி 69.41 சதவீதம் அதிகரித்து, 146.31 மில்லியன் டன்னிலிருந்து 247.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய ஐந்து மாநிலங்கள் நாட்டின் மொத்த பால் உற்பத்தியில் 54.09 சதவீதம் பங்களிப்பை வழங்குகின்றன. தனிநபருக்கு தினசரி பால் கிடைக்கும் அளவு 319 கிராமிலிருந்து 485 கிராமாக அதிகரித்துள்ளது.

தேசிய பால்வள தினம்

பால்வள தொழில் 8.5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குவதுடன், இத்துறையின் பணியாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். நாட்டின் பால் உற்பத்தியை அதிகரித்த வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி தேசிய பால்வள தினமாக கொண்டாடப்படுகிறது.

22 பால் கூட்டமைப்புகள்

நாட்டின் பால்வள கூட்டுறவு கட்டமைப்பில் 22 பால் கூட்டமைப்புகள், 241 மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியங்கள், 25 பால் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்படுகின்றன. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (என்டிடிபி) பால்வள சேவைகள் அமைப்பு, 12 மாநிலங்களில் 25 பால் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவியுள்ளது. இவற்றில் 18 அமைப்புகள் முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2026 அக்டோபர் 31 நிலவரப்படி நாளொன்றுக்கு 690.90 லட்சம் கிலோ பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் பால் கொள்முதலை 50 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் 'வெண்மை புரட்சி 2.0' திட்டம் செயல்படுத்தப்பட்டு, 24,097 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாணத்திலிருந்து உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் கோபர்தன் திட்டமும் ஊக்குவிக்கப்படுகிறது.

கால்நடை நலன் மற்றும் ஏற்றுமதி

பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டம், தேசிய கோகுல் இயக்கம், நாடு தழுவிய செயற்கை கருவூட்டல் திட்டம், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவற்றின் மூலம் பால்வளக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடைகள் சுகாதாரம், நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான 4,019 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் 1.5 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.

407.12 மில்லியன் அமெரிக்க டாலர்

கால்நடைகளுக்கு 152 கோடிக்கும் அதிகமான கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பாரத் பசுதன் தரவுத்தளத்தில் 9.98 கோடி கால்நடை உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளதுடன், 39.42 கோடிக்கும் அதிகமான பசு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025-26-ம் ஆண்டில் இந்தியா 97,524.82 மெட்ரிக் டன் பால் பொருட்களை ஏற்றுமதி செய்து 407.12 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

X