

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் அபாய கட்ட அளவில் இருக்கிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதின்பேரில், கடந்த 13-ந் தேதி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
அதன் பின், காற்று மாசு மோசமாகியிருப்பதை கருத்தில்கொண்டு டெல்லியில் 15-ந் தேதி முதல் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்படும், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம், 17-ந் தேதி வரை (நேற்றுவரை) கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படுகின்றன என தெரிவித்தார்.
காற்று மாசின் காரணமாக, அடுத்த அறிவிப்புவரும் வரையில் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற வெளிவாகனங்களுக்கு தடை விதிக்கவும் டெல்லி அரசு நேற்று முடிவு எடுத்தது.
இந்த நிலையில், டெல்லியில் காற்று தர குறியீடு இன்று 332 ஆக உள்ளதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் மெதுவாக முன்னேறி வருகிறது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் தொடரும் காற்று மாசின் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.