‘இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம்’ - அமித்ஷா

விரைவு நீதிமன்றங்களை அமைத்து, விசாரணையை விரைவுபடுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
‘இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம்’ - அமித்ஷா
Published on

புதுடெல்லி,

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகவும், 'நீட்' தேர்வு தோல்வி காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்தது போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், கடந்த 20-ந்தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களை தடுக்க பல இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனாலும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்ததால் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. பதிலுக்கு போலீசார் மீது கல்வீச்சும் நடந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், இளைஞர்களும் தாக்கப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை பெரிதாக எடுத்தன. காங்கிரஸ் கட்சியும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து டெல்லியில் இளைஞர்கள் குவிந்து வருவதால், தலைநகரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டின் இளைஞர்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வதே அரசின் உறுதியான நோக்கம் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இளைஞர்களின் நலனும், அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதுமே மோடி அரசின் மிக உயர்ந்த நோக்கமாக உள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் விரைவு நீதிமன்றங்களை அமைத்து, விசாரணையை விரைவுபடுத்தவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் எடுத்துள்ள முடிவு, இந்த உறுதிப்பாட்டையே பிரதிபலிக்கிறது. வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்கள், பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த முக்கியமான நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையப்போகிறது என்பதை உணர்வார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com