

புதுடெல்லி,
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.
உலகளவில் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடியாக இருந்தது. இதில் 80 சதவீதம் பேர், அதாவது சுமார் 96 கோடி பேர் சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ.) தரவுகளின் படி, புகையிலையினால் ஆண்டுதோறும் ஏற்படும் 80 லட்சம் மரணங்களில், 70 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் சிகரெட் புகைப்பதால் மட்டுமே ஏற்படுகின்றன. இதில் வேதனையான தகவல் என்னவென்றால், தாங்களாக புகைபிடிக்காமல் பிறர் வெளியிடும் புகையை சுவாசித்ததால் மட்டுமே ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் சிகரெட் புகைப்பவர்களில் 82 சதவீதம் பேர் ஆண்கள் ஆவார்கள். உலகெங்கிலும் உள்ள முதிர்ந்த ஆண்களில் சராசரியாக 4-ல் ஒருவர் தினசரி சிகரெட் புகைப்பவர்களாக இருக்கின்றனர். இதேபோல், பெண்களிடையே உலகளவில் சிகரெட் புகைக்கும் பழக்கம் மிக வேகமாக குறைந்து வருகிறது. தற்போது உலக பெண்களில் வெறும் 2 முதல் 3 சதவீதம் பேர் மட்டுமே சிகரெட் புகைப்பவர்களாக உள்ளனர். இதில் ஐரோப்பிய நாடுகள் சேர்க்கப்படவில்லை. அங்கு இந்த சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தரவுகளின்படி, கடந்த 15 ஆண்டுகளில் ஜி20 நாடுகளில் இருப்பவர்களில் சிகரெட் புகைத்தல் சதவீதம் குறைந்து வருவது சமீபத்தில் செய்தியாக வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் சிகரெட் அல்லது புகையிலை பயன்பாட்டு விகிதம் என்பது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 2010-ம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிகரெட் புகைப்பவர்கள் 9.7 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் இது 3.8 சதவீதமாக பெருமளவில் குறைந்துள்ளது. அதற்கடுத்ததாக அமெரிக்கா, இத்தாலி, சீனா, ரஷியா நாடுகளிலும் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியாவில் மட்டும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிகரெட் பயன்பாடு குறைய முக்கிய காரணம், அதன் மீதான உலக நாடுகளின் கடுமையான வரி உயர்வுதான். நுகர்வோரின் வாங்கும் திறனை விட சிகரெட்டின் விலை பல மடங்கு உயர்ந்ததால், நடுத்தர வர்க்கத்தினர் இப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். இவற்றுடன், புகையிலை பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, பொது இடங்களில் புகைபிடிக்க தடை மற்றும் அபராதம் போன்ற கடுமையான விதிகளும் இந்த ஆரோக்கியமான மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளன.