பா.ஜனதா ஆட்சியால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை; கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேச்சு

பா.ஜனதா ஆட்சியால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதா ஆட்சியால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை; கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேச்சு
Published on

ராமலிங்கரெட்டி பொறுப்பு ஏற்பு

கர்நாடக மாநில செயல் தலைவராக முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவர், செயல் தலைவராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன காகே, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டு செயல் தலைவராக பொறுப்பு ஏற்று கொண்ட ராமலிங்க ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேசியதாவது;-

நிம்மதியாக வாழ முடியவில்லை

மத்திய பா.ஜனதா ஆட்சியால் யாரும் நிம்மதியாக வாழ முடியவில்லை. மக்கள் நிம்மதியை இழந்து தங்களது வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு பா.ஜனதா ஆட்சியால் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள், பெண்கள், தலித்துகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நிம்மதி இன்றி வாழ்கிறார்கள். பா.ஜனதா அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறி விட்டது. அரசியலிலும், வாழ்க்கையிலும் தாமாக எதுவும் கிடைத்து விடாது என்று இந்திராகாந்தி கூறி இருக்கிறார்.

பதவி மீது ஆசை இல்லை

ஆனால் தற்போது நாம் எதையும் தேடி போக வேண்டிய நிலை இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசும், கர்நாடகத்தில் நடைபெற்று வரும் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசும் மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறார்கள். அதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை அமைக்க விரும்பி காங்கிரஸ் கட்சி செல்ல வேண்டிய அவசியமில்லை. பா.ஜனதாவினரே நமது வீடு தேடி ஆட்சியை விட்டு கொடுத்துவிட்டு செல்வார்கள்.

காங்கிரஸ் கட்சியில் தனிநபருக்கு துதிபாடும் நிலை ஏற்படக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது, அடுத்த முதல்-மந்திரி நான் தான் என்று தொண்டர்கள் கோஷமிட்டார்கள். எனக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசையில்லை.

காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும். காங்கிரசை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com