திட்ட கமிஷன் மீண்டும் அமைக்கப்படும்: எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பணமதிப்பு நீக்கம் குறித்து விசாரணை - மம்தா பானர்ஜி

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் திட்ட கமிஷன் கொண்டு வருவதுடன், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்படும் என மம்தா பானர்ஜி உறுதிபட தெரிவித்தார்.
திட்ட கமிஷன் மீண்டும் அமைக்கப்படும்: எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பணமதிப்பு நீக்கம் குறித்து விசாரணை - மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தீவிரமாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த தேர்தல் அறிக்கையை கொல்கத்தாவில் நேற்று அவர் வெளியிட்டார். பின்னர் அது தொடர்பாக அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றால் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக அதிகரிக்கப்படும். அத்துடன் அதற்கான ஊதியமும் இரு மடங்காக உயர்த்தப்படும்.

பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படும். பா.ஜனதா அரசு கொண்டு வந்த நிதி ஆயோக் அமைப்பால் எந்த பலனும் இல்லை. எனவே அந்த அமைப்புக்கு பதிலாக, ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த திட்ட கமிஷன் அமைப்பு மீண்டும் கொண்டு வரப்படும்.

மத்திய அரசு செயல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. குறித்து மறு ஆய்வு செய்து, அது மக்களுக்கு பலனுள்ளதாக இருந்தால் மட்டுமே அதை தொடர்வோம். இல்லை என்றால் அது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநில போலீஸ் மேற்பார்வையாளராக எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் இயக்குனர் கே.கே.சர்மா நியமிக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பதவிக்காலத்தின் போது ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் சீருடையில் கலந்துகொண்ட ஒருவரை பணியில் இருக்கும் போலீசாரை கண்காணிக்கும் பணியில் எப்படி அமர்த்த முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com