பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது - தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது - தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் தோல்வி
Published on

புதுடெல்லி,

அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 323 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

இதையடுத்து, நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சமூக நீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷத்துக்கிடையே அவர் தாக்கல் செய்தார்.

அப்போது, கடந்த கால அரசுகள் பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு கொண்டு வர முயன்றபோது, கோர்ட்டுகள் அதை நிராகரித்ததாகவும், மோடி அரசு வெற்றிகரமாக கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மசோதாவை அவசரகதியில் கொண்டுவரவில்லை என்றும், இதை நிறைவேற்றி தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது, மசோதாவை தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பக் கோரும் தீர்மானத்தை தி.மு.க. எம்.பி. கனிமொழி தாக்கல் செய்தார். தனது தீர்மானம் மீது முதலில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜாவும் ஆதரித்தார். ஆனால், விவாதத்தை முடித்த பிறகு தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தலாம் என்று சபை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் கூறினார்.

மேலும், எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை தடுக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி விஜய் கோயல் குற்றம் சாட்டினார். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, தாங்கள் மசோதாவை ஆதரிப்பதாகவும், மசோதா கொண்டு வரப்பட்ட முறையைத்தான் எதிர்ப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை சபை துணைத்தலைவர் பேச அழைத்தார். அவரிடம் கனிமொழி சென்று தனது கோரிக்கையை எடுத்துரைத்தார். டி.கே.ரங்கராஜன் பேசும்போது, தனியார் துறையில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மீதி உள்ள 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு இம்மசோதா பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

கனிமொழி தனது தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியநிலையில், பிற்பகல் 2 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய பிறகு, மசோதா மீது விவாதம் நடந்தது. மத்திய மந்திரிகள் ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே மற்றும் ஜி.வி.எல்.நரசிம்மராவ் (பா.ஜனதா), கபில் சிபல் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), அமர்சிங் உள்ளிட்டோர் பேசினர்.

விவாதத்தை தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மேல், மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், 165 உறுப்பினர்களின் ஆதரவுடன் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

அ.தி.மு.க., தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம், பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

கனிமொழி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கொண்டு வந்த தீர்மானமும் தோல்வியை தழுவியது.

இதன்மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொதுப்பிரிவினர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறி விட்டது. இதையடுத்து, ஜனாதிபதி ஒப்புதலுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு சட்ட வடிவம் பெறும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com