

புதுடெல்லி,
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கீ பாத்(மனதின் குரல்) என்ற தலைப்பில் உரையாற்றி வருகிறார். ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசியதாவது:
பேரிடர் காலத்தில் மனிதாபிமான காட்சி விரிவடைவதை நம்மால் காண முடிகிறது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் ஒவ்வொருவரும் தங்களின் நிலைமைக்கேற்ப துயரைக் களையும் வகையில் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள்.
அது கேரளாவாகட்டும், அல்லது இந்தியாவின் எந்த ஒரு பகுதியாகட்டும். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப மக்கள் தங்களிப்பை அளிக்கின்றனர். கேரள வெள்ளத்தின் மீட்பு, நிவாரண பணிகளில் முப்படைகளும் இந்த இயக்கத்தில் பெரிதும் பங்காற்றி இருக்கிறார்கள்.
தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றினர். இக்கட்டான நேரங்களில் அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினர். இந்த படையின் திறன், அவர்களின் முனைப்பு உடனடியாக முடிவுகள் எடுத்து சூழ்நிலையை சமாளிக்கும் முயற்சி ஆகியவை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு புதிய அக்கறையின் மையமாக ஆக்கியிருக்கிறது.
கேரள வெள்ளத்தில் உடமைகளை இழந்தவர்கள், வெள்ளம் ஏற்படுத்திய துயரத்தில் இருப்பவர்களது குடும்பங்களின் வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய துக்கத்தை நம்மால் முழுமையாக ஈடு செய்ய முடியாது என்றாலும் கூட அந்த குடும்பங்களுக்கு நாம் அளிக்கக்கூடிய நம்பிக்கை என்னவென்றால் ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்கு துணை நிற்கிறது என்பதுதான்.
125 கோடி இந்தியர்களும் துக்கம் நிறைந்த இந்த தருணத்தில் உங்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள். நேற்றுதான் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை தேசத்துக்கும், குறிப்பாக கேரளாவுக்கு சக்தி அளிக்கவேண்டும்.
இந்த பேரிடரின் தாக்கத்தில் இருந்து கேரள மக்கள் விரைவாக மேலெழுந்து வரவேண்டும். மாநில மக்களின் பேரார்வமும், அளப்பரிய ஆற்றலும் கேரளத்தை விரைவாக மீண்டெழச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்தியாவுக்கு அளித்த அரசியல் கலாசாரம் அதில் மாற்றம் ஏற்படுத்த அவர் மேற்கொண்ட தீவிரம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயம் இனி வரும் நாட்களில் பயன் உள்ளதாக இருக்கும் என்பது உறுதி.
அவர் நல்லாட்சிக்காக பல சீர்திருத்தங்களை செய்தார். முதலில் மாநிலங்களில் மந்திரிகளின் எண்ணிக்கை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது. இதனால் பணம், செலவினங்கள் சேமிக்கப்பட்டன.
அடுத்ததாக, கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தின்படி முன்பு இருந்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் என்ற அளவை அதிகரித்து மூன்றில் 2 பங்கு என ஆக்கினார். மேலும் காட்சித் தாவலில் ஈடுபடுபவர்களின் உறுப்பினர் பதவி இழப்பை உறுதி செய்யும் தெளிவான நெறிமுறைகளை விதிக்க வகை செய்தார்.
முன்பெல்லாம் வெள்ளையர்களின் வழிமுறைப்படி மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதை பகல் 11 மணிக்கு என வாஜ்பாய் மாற்றினார். தேசிய கொடியை பொது இடங்களில் பறக்க விடுவதற்கும் அவருடைய ஆட்சி காலத்தில்தான் (2002ல்) சட்டம் இயற்றப்பட்டது.
நாடாளுமன்றம், மாநில சட்டசபைகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாதங்கள் வைக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. மக்களாட்சி முறைக்கும் இது ஆரோக்கியமான அறிகுறிதான்.
எந்தவொரு நாகரிகமான சமூகமும், பெண் சக்திக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை பொறுத்துக் கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் பாதகர்களை நாடு சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனையும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுப்பதில் பெரும் துணையாக இருக்கும்.
சமூக மாற்றம் இல்லாத பொருளாதார முன்னேற்றம் முழுமையாக அமையாது. மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவையில் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாமல் போனது. இஸ்லாமிய பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாடு முழு மனதோடு துணை நிற்கிறது என்று நான் நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதில் பெருகிவரும் எண்ணிக்கையில் நமது பெண்களும் அதிகம் இடம் பெற்று இருக்கிறார்கள். பதக்கங்கள் வென்ற இளம் வீரர்களில் 1516 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களும் உள்ளனர். இதுவும் கூட ஆக்கப்பூர்வமான அறிகுறிதான்.
ஹாக்கி விளையாட்டில் மாயாஜாலம் புரிந்த தயான்சந்த் பிறந்த தினமான ஆகஸ்டு 29ந்தேதியை நாம் தேசிய விளையாட்டுகள் தினமாக கொண்டாடவிருக்கிறோம். இந்த வேளையில் அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் பேசினார்.