மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை: காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு

மோடி அரசிடம் புதிய சிந்தனைகள் இல்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை:  காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசும்போது, அனைவருக்குமான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.


மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு எதுவுமில்லை:  காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா: நலத்திட்ட உதவிகளை செய்ய ஆனந்த் வலியுறுத்தல்

பொதிகை மலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டம், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம், அதிவேக ரெயில்கள் இயக்க 7 வழித்தடங்கள், அரியவகை தாது வழித்தட திட்டம், அதற்காக நிதி ஒதுக்கீடு, 16-வது நிதிக்குழு பரிந்துரைகள் ஏற்பு, உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கத்திற்கான வரி குறைக்கப்படவில்லை. இதனால், தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காணும் நிலை உள்ளது. புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41 சதவீதம் என்ற அளவில் தொடரும். இதனால், 50 சதவீதம் என்ற நிதி ஆணையத்தின் பரிந்துரை செயல்படுத்தப்படாது போன்ற விசயங்களம் உள்ளன.

இது வளர்ச்சிக்கு உரிய பட்ஜெட் என பிரதமர் மோடி தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். இந்த மத்திய பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பட்ஜெட்டுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பும் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கு என்று எதுவுமில்லை என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, இளைஞர்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பின்மைக்கு எந்த தீர்வும் இல்லை. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எதுவும் இல்லை. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சரிந்து வரும் சேமிப்புகள் மற்றும் சமத்துவமின்மை அதிகரிப்பு போன்ற விசயங்களை எதிர்கொள்ள நிலையான திட்டங்களை இந்த பட்ஜெட் வழங்கவில்லை.

மோடி அரசிடம் புதிய சிந்தனைகள் இல்லை. இந்தியாவில் காணப்படும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் போன்ற முக்கிய சவால்கள் நிறைந்த விசயங்களில் பதில் அளிப்பதற்கு பதிலாக நிறைய கேள்விகளையே இந்த பட்ஜெட் எழுப்பியுள்ளது.

இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதுவும் அளிக்கவில்லை. பணவீக்கம் கட்டுப்படுவதற்கான எந்த தீர்வோ, நேர்மறையான ஆலோசனையோ அல்லது ஸ்திரத்தன்மை கொண்ட நடவடிக்கைகளையோ அவர்கள் மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யவில்லை என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com