சபரிமலை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் தடை கூடாது! - கேரள அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மருத்துவ. ஊராட்சி பணியாளர்களுக்கு உணவு வழங்க தடை விதித்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
சபரிமலை பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் தடை கூடாது! - கேரள அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

கொச்சி,

சபரிமலை வனப்பகுதியில் பணிபுரியும் மருத்துவ, ஊராட்சி பணியாளர்களுக்கு தடையின்றி உணவு வினியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவ பணியாளர்கள்

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இந்த சீசனில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து. இருமுடி கட்டி வந்து சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக சபரிமலை வனப்பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் தடை ஏற்பட்டது. போலீசாருக்கு உணவு தயாரித்து வழங்கும் காவல்துறை உணவகத்தில் இருந்து மருத்துவ. ஊராட்சி பணியாளர்களுக்கு உணவு வழங்க தடை விதித்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்தநிலையில் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தடையின்றி உணவு வினியோகம்

அப்போது, சபரிமலை வனப்பகுதியில் பக்தர்களுக்காக பணியாற்றி வரும் மருத்துவ, ஊராட்சி பணியாளர்களுக்கு காவல்துறை உணவகத்தில் இருந்து உணவு வழங்காவிட்டால், எருமேலி வன பாதையில் அவர்கள் பணிபுரிவதில் சிக்கல் ஏற்படும். எருமேலி வனப்பகுதி வழியாக வனப்பகுதியில் பணிபுரிபவர்களுக்கு உணவு அனுமதிக்குமாறு மாநில அரசிடம் காவல்துறை கோரி உள்ளது. இதில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டும் எடுத்துரைத்துள்ளது.

அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை சேவைகள் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு உணவு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால், அது சரியான நடவடிக்கையாக இருக்காது. அவர்களது பணியில் பாதிப்பு ஏற்படும்.

ஐகோர்ட்டு உத்தரவு

எனவே, பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு காவல்துறை திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிந்துரையை ஏற்று கொண்டு, காவல்துறை உணவகத்தில் இருந்து மருத்துவ மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும் என்றும், இதனை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

X