அராஜகத்தை தூண்டும் ராகுல் - ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

ராகுலின் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
 ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
Published on: 

புதுடெல்லி,

ராகுல் அராஜகத்தின் தூதுவர் என பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று (6ஆம் தேதி) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் பேரணியை தொடங்கி, தேர்தல் ஆணையம் நோக்கி சென்றனர்.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் திருமாவளவன், சு. வெங்கடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் அருகேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சென்ற போது காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,

"சுமார் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை இங்கே தடுத்து நிறுத்திவிட்டனர். நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஏன் இங்கே தடுத்து நிறுத்தப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் 'வாக்குத் திருட்டு' மூலம் நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். ஞானேஷ் குமார் அவர்களுக்குத் துணை நின்றார். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நம் நாட்டிற்கு இழைக்கப்பட்ட இந்தச் செயல் தேசத்துரோகம் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது" எனத் தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியினர், குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் அவரது சகாக்கள் நடத்தி வரும் அன்றாட நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ராகுல், அராஜகத்தின் துாதர். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே விரும்புகிறாம் என்று பாஜக எம்.பி., ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

காங்கிரசார் நாட்டில் குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்ப விரும்புகிறார்கள். ராகுல், டெல்லியின் மிக முக்கியமான மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் மிகுந்த இடத்தில் ஒன்றில் அமர்ந்து கொண்டு அராஜகத்தைத் தூண்டி வருகிறார். ராகுலும், அவரது கட்சியின் தலைவரும், மற்றவர்களும் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டுவர கோருகின்றனர்.

நேர்மையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் வெற்றிபெற முடியாததால், ஓட்டுச்சாவடிகளைக் கைப்பற்றும் முறையில் வெற்றிபெற அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது... பீகாரில் நீங்கள் தோல்வியுற்றீர்கள், வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்றீர்கள்.

அரியானா, மராட்டியம் மற்றும் டெல்லியிலும் நீங்கள் தோல்வியடைந்தீர்கள். அப்படியென்றால், உங்களுக்குத்தான் என்னதான் வேண்டும்? மக்களின் தீர்ப்பை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.

ராகுலின் இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் அராஜகத்தையே விரும்புகிறார். கடந்த காலங்களில் ராணுவத் தளபதி குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவித்த அவர், இன்று பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் மோகன் பாகவத் ஆகியோர் மீது முற்றிலும் வெட்கக்கேடான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இவற்றை நாங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ராகுல் அராஜகத்தின் தூதுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com