இது வெறும் டிரெய்லர் தான்: 'இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம்' - சி.ஜே.பி.

ஒரு கட்சியாகவும் இயக்கமாகவும் எங்கள் பயணம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இது வெறும் டிரெய்லர் தான்: 'இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம்' - சி.ஜே.பி.
Published on

புதுடெல்லி,

டெல்லியின் ஜந்தர் மந்தரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP) நடத்திய போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேசுகையில், இளைஞர்களின் பிரச்சினைகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.

மிகப்பெரிய வெற்றி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சௌரவ் தாஸ் பேசியதாவது:-

ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறலும் பதிலளிக்கும் கடமையும் அவசியம். நாட்டின் எதிர்காலமாகத் திகழும் இளைஞர்களே இதை சாத்தியமாக்கியுள்ளனர். இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். நாட்டின் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

இருப்பினும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ விரோத அரசியலை முன்னிறுத்தி ஆட்சி செய்யும் முறையை தயவுசெய்து கைவிடுங்கள். மாணவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் நலனுக்காகவும் செயல்படுங்கள். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை நீங்கள் பெற முடியும்.

இது வெறும் தொடக்கம் மட்டுமே

இது வெறும் முன்னோட்டம் (டிரெய்லர்) மட்டுமே. உண்மையான நிகழ்வு இனிமேல்தான் வரவிருக்கிறது. நாட்டின் இளைஞர்கள் விழித்துக்கொண்டுவிட்டனர். அவர்களே நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பார்கள். ஒரு கட்சியாகவும் இயக்கமாகவும் எங்கள் பயணம் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை.

இனி நாங்கள் நாடு முழுவதும் சென்று இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களுக்கான சிறந்த கொள்கைகளை முன்வைப்போம். அத்துடன் அனைவரிடமிருந்தும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். இது வெறும் தொடக்கம் மட்டுமே. இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன.

1 கோடி ரூபாய் இழப்பீடு

கல்வித் துறையில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான முதல் படியாகவே தர்மேந்திர பிரதானின் ராஜினாமா அமைந்துள்ளது. நாங்கள் 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரியிருந்தோம். அரசு கண்ணியமான இழப்பீட்டை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதே எங்கள் நோக்கம்.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமா ஒரு முதல் படி. கல்வி அமைப்பு முறை சீரமைக்கப்படாவிட்டால், இளைஞர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் மீண்டும் வருவார்கள். மக்கள் தாக்கப்பட்டனர். அவ்வாறு நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மேந்திர பிரதான்

முன்னதாக மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் "நல்லெண்ண அடிப்படையில்" இந்த முடிவை எடுத்ததாகக் கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை கைவிட்டது. நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதான் கல்வி மந்திரி பதவியிலிருந்து விலகினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com