

புதுடெல்லி:
டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று பிற்பகல் மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டு மீண்டும் விமானம் நிறுத்தப்படும் பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இண்டிகோ விமானம் 6E 6091 புறப்பட இருந்தது. ஏர்பஸ் ஏ321 நியோ ரக விமானமான இது, புறப்படுவதற்கான தயாரான நிலையில், விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு தொலைபேசி அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, விமானத்தின் கழிவறை ஒன்றில் ‘6E 6091 விமானத்தை இயக்க வேண்டாம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த வாசகம் காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததா அல்லது கழிவறைச் சுவரில் எழுதப்பட்டிருந்ததா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இதையடுத்து, விமானத்தின் புறப்பாடு நிறுத்தப்பட்டு, விமானம் நிறுத்தி வைக்கப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மிரட்டல் தகவல் கிடைத்ததும், பாதுகாப்பு நடைமுறைகளின்படி விமானத்தைத் தனிமைப்படுத்தப்பட்ட நிறுத்துமிடத்துக்கு கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இந்தச் சம்பவத்தின்போது விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.