ரூ.3,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பணமோசடி வழக்கில் 3 பேர் கைது - அமலாக்கத்துறை தகவல்

கைது செய்யப்பட்டவரக்ளை செப்டம்பர் 1-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.3,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பணமோசடி வழக்கில் 3 பேர் கைது - அமலாக்கத்துறை தகவல்
Published on

பனாஜி,

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.3,000 கோடிக்கு நிகழ்த்தப்பட்ட டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி பணமோசடிகள் தொடர்பான வழக்கில் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இத்துடன் இந்த வழக்கில் கோவாவின் பனாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்படி, இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக மும்பையில் கடந்த 23-ந்தேதி பாகிம் மொயின் ஹுசைன் மற்றும் நயிம் முயீன் சயீது ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து தற்போது பூஷன் சூர்யகாந்த் மோயே, விலாஸ் நாராயண் பவார் மற்றும் சைலேஷ் தக்து ஆகிய 3 பேர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பனாஜியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை செப்டம்பர் 1-ந்தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'டிஜிட்டல் கைது' (Digital arrest) என்பது ஒரு இணையவழி குற்றமாகும். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகளைப் போல் நடித்து, வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை அச்சுறுத்தி, அவர்களை சிறைபிடித்து வைத்திருப்பது போன்ற சூழலை உருவாக்கி, இணையவழியில் பணத்தை அனுப்புமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த மோசடியை நம்பி இந்தியாவில் ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். டிஜிட்டல் கைது மோசடி தொடர்பான புகார்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற மோசடிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. டிஜிட்டல் முறையில் யாரையும் கைது செய்ய முடியாது. இந்தியாவில் 'டிஜிட்டல் கைது' என்பது சட்டப்பூர்வமானது அல்ல என்றும், இத்தகைய குற்றங்கள் குறித்து தேசிய இணையக் குற்ற உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com