ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் பயணம்... இளம்பெண் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்

பெண் போலீஸ் ஒருவர் இளம்பெண்கள் 3 பேர் பயணித்த ஸ்கூட்டரை நிறுத்தினார்.
ஒரே ஸ்கூட்டரில் 3 பேர் பயணம்... இளம்பெண் கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலம், லாத்தூரில் உள்ள ரேனாப்பூர் நாக்காவில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெண் போலீஸ் ஒருவர் இளம்பெண்கள் 3 பேர் பயணித்த ஸ்கூட்டரை நிறுத்தி, அவர்களை மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதுடன், அவர்களில் ஒரு பெண்ணை பளார் என கன்னத்தில் அறையும் காட்சி பதிவாகி இருந்தது.

இது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பேசுபொருளானது. பலர் பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் வீடியோவில் இருந்த பெண் போலீஸ் பிரணிதா முஸ்னே என தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண் போலீஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறேன். சம்பவத்தன்று எனது மகள்களை டியூசன் வகுப்பில் விட்டு விட்டு, பணிக்கு சென்றுகொண்டு இருந்தேன். அப்போது 3 இளம்பெண்கள் ஒரே ஸ்கூட்டரில் வேகமாக செல்வதை கண்டேன். அவர்களிடம் பாதுகாப்பாக பயணிக்குமாறு கூறினேன்.

அதற்கு அவர்கள் என்னை எனது வேலையை பார்க்குமாறு கூறினர். அதுமட்டும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் அவர்கள் தொடர்ந்து பயணித்தனர். குறிப்பாக ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த பெண் சரியாக உட்காரவில்லை. எனவே அவர்களை நான் பின்தொடர்ந்து சென்றேன். ஒரு அரசு பஸ் எதிரே வந்ததால் அவர்கள் ஸ்கூட்டரை நிறுத்தினர்.

அப்போது நான் அவர்களை பிடித்து திட்டினேன். ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தேன். நான் அதை ஒரு பெண் போலீஸ் என்ற முறையில் செய்யவில்லை. ஒரு தாயை போல நடந்துகொண்டேன். நான் அவர்களிடம் பயன்படுத்திய வார்த்தைகள் தவறானது. அதற்காக பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எனது நோக்கம் தவறானது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com