

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இன்று நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இந்திய கடற்படைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய் மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
மத்திய அரசின் ‘சுயசார்பு இந்தியா’ (ஆத்மநிர்பர் பாரத்) திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் இந்த கப்பல்களை வடிவமைத்துள்ளது. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் இக்கப்பல்களை கட்டி முடித்துள்ளது. வெவ்வேறு திறன்களைக் கொண்ட மூன்று முன்னணி கப்பல்கள் ஒரே நேரத்தில் இந்திய கடற்படையில் இணைவது நாட்டின் கடற்படை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஐஎன்எஸ் துனகிரி போர்க்கப்பல், எதிரி நாடுகளின் ரேடார் கண்காணிப்பில் எளிதில் சிக்காமல் செயல்படும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் அக்ராய், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட கப்பலாகும். அர்்னாலா வகுப்பைச் சேர்ந்த இந்த கப்பல், ஆழமற்ற கடற்பகுதிகளில் செயல்படும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து எதிர்கொள்ளும் திறன் கொண்டது
ஐஎன்எஸ் சன்ஷோதக், கடலாய்வு மற்றும் சர்வே பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஆய்வுக் கப்பலாகும். இது இந்திய கடற்படையின் நான்காவது பெரிய சர்வே கப்பலாகக் கருதப்படுகிறது. ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளின் நில அமைப்புகளை துல்லியமாக வரைபடமாக்குவதில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றும்.