

புதுடெல்லி,
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு தனது ஆதரவை தெரிவித்தது. இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வசதிவாய்ப்புகள் குறித்து தேர்தல் கமிஷனிடம் சட்ட கமிஷன் கருத்து கேட்டது.
தேர்தல் கமிஷனின் கருத்துகள், சட்ட அமைச்சகத்துக்கும், பாராளுமன்ற நிலைக்குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வருட தொடக்கத்தில் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குதலுக்கான உத்திகள் பற்றி கருத்தரங்கில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் 2 முக்கிய நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மின்னணு ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தமட்டில் அவற்றை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை என்றார்.
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்குத்தான் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் கூறுகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல்
இப்போது 2018 செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் தேர்தலை திறம்பட நடத்துவதற்காக வாக்காளர் பதிவு அதிகாரி ஒருங்கிணைப்பு என்னும் இணையதள செயலி ஒன்றை தேர்தல் கமிஷன் நேற்று டெல்லியில் அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நிருபர்களிடம் கூறியதாவது: பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்று எங்களிடம் மத்திய அரசு கேட்டது.
இதையடுத்து, புதிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு காட்டும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் வாங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மத்திய அரசிடம் இருந்து இதற்கான நிதி கிடைத்ததும், இவற்றை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது. மொத்தம் 40 லட்சம் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் தேவைப்படுகிறது. திட்டமிட்டவாறு இந்த எந்திரங்கள் எங்களுக்கு வந்துவிட்டால் பாராளுமன்றம், அனைத்து மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த அடுத்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் கமிஷன் தயாராகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.