காஷ்மீரில் சுற்றுப்பயணம்: வெளிநாட்டு தூதர்களுடன் தலைமை செயலாளர், டி.ஜி.பி. சந்திப்பு

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிந்தைய நிலைமை குறித்து அறிய வெளிநாட்டு தூதர்கள் சுற்றுப்பயணம் செய்தனர். அவர்களை காஷ்மீர் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. உள்பட பல்வேறு தரப்பினர் சந்தித்து பேசினர்.
காஷ்மீரில் சுற்றுப்பயணம்: வெளிநாட்டு தூதர்களுடன் தலைமை செயலாளர், டி.ஜி.பி. சந்திப்பு
Published on

ஜம்மு,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிந்தைய நிலைமையை நேரில் அறிய 15 வெளிநாட்டு தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் மற்றும் தென்கொரியா, வியட்நாம், வங்காளதேசம், பிஜி, மாலத்தீவு, நார்வே, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, அர்ஜென்டினா, பெரு, நைஜர், நைஜீரியா, கயானா, டோகோ ஆகிய நாடுகளின் இந்தியாவுக்கான தூதர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றனர். மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விகாஸ் ஸ்வரூப் உடன் சென்றார்.

நேற்று முன்தினம் அவர்கள் ஸ்ரீநகர் சென்றடைந்தனர். குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூகநல அமைப்புகளின் பிரமுகர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகளை நேரில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர்.

அன்று மாலையே அவர்கள் ஜம்முவுக்கு சென்றனர். அவர்களுக்கு கவர்னர் மர்மு விருந்து அளித்து உரையாடினார். ராணுவ கண்டோன்மெண்டுக்கு வெளிநாட்டு தூதர்கள் அழைத்து செல்லப்பட்டனர். லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான் தலைமையலான ராணுவ அதிகாரிகள் குழு அவர்களுக்கு பாதுகாப்பு நிலவரத்தை எடுத்துரைத்தது.

இந்நிலையில், நேற்று காஷ்மீர் தலைமை செயலாளர் பி.வி.ஆர்.சுப்பிரமணியன், போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் வெளிநாட்டு தூதர்களை சந்தித்தனர். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிந்தைய பாதுகாப்பு சூழ்நிலையின் பல்வேறு அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இந்த காலகட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். நிலைமையை கையாள்வதில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் சிறப்பாக செயல்படுவதாக கூறினர்.

கைது, இணையதள சேவை முடக்கம், சட்டம்-ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து வெளிநாட்டு தூதர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர்.

அரசு ஏற்படுத்திய மருத்துவ வசதிகள் குறித்து சுகாதார ஆணையர் அதுல் துல்லூ எடுத்துரைத்தார்.

பின்னர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதர்களை சந்தித்தனர். பாகிஸ்தான் அகதிகள் அமைப்பின் தலைவர் லாபா ராம் காந்தி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் அமைப்பு தலைவர் நரேந்தர் சிங், ஜம்மு பார் அசோசியேசன் தலைவர் அபினவ் சர்மா, காஷ்மீர் குஜ்ஜார் ஐக்கிய கூட்டமைப்பு தலைவர் குலாம்நபி காடனா, வக்கீல்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். காஷ்மீர் வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும் என்று அவர்கள் கூறினர்.

பின்னர், ஜம்மு அருகே ஜகதி என்ற இடத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமை வெளிநாட்டு தூதர்கள் நேரில் பார்வையிட்டனர். நேற்று மாலை, டெல்லி திரும்பினர்.

கடந்த அக்டோபர் மாதம், ஐரோப்பிய நாடுகளின் எம்.பி.க்கள் 23 பேர் காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்த பிறகு, அங்கு சென்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் இவர்களே ஆவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com