

புதுடெல்லி
டெல்லியில் 11-ந்தேதி வரை போராட்டங்களை அனுமதிக்கக்கூடாது என காவல் ஆணையாளருக்கு வர்த்தக சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் சூழலில், அதுவரை எந்த போராட்டமும் இல்லை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நவம்பர் 1-ல் பிரமாண்ட பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, டெல்லியில் கடந்த 1-ந்தேதி இந்தியா கூட்டணி நடத்திய பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக அந்த பகுதியில் இரண்டரை லட்சம் கடைகள் வரை அடைக்கப்பட்டன. இதனால் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் பாதிக்கப்பட்டது. ரூ.14 ஆயிரம் கோடி வியாபாரம் இழப்பு ஏற்பட்டு விட்டது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்க தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
முன்பு இது ரூ.12 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்த இழப்பீட்டை யார் தருவார்? என கேள்வி எழுப்பிய அவர், தற்போது டெல்லி காவல் ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், தீபாவளி மற்றும் சில பண்டிகைகளை முன்னிட்டு வருகிற 11-ந்தேதி வரை டெல்லியில் எந்தவொரு போராட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டாம் என கேட்கப்பட்டு உள்ளது. வியாபாரிகளின் நலன் கருதி இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
குறிப்பாக பழைய டெல்லி, கன்னாட் பிளேஸ், ஜந்தர் மந்தர், ராம்லீலா மைதானம், இந்தியா கேட், ராஜ்காட் போன்ற பகுதிகளில் பேரணிக்கோ, கூட்டங்களுக்கோ அனுமதி அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.