

மங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகா ஹெரஞ்சே பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் பூஜாரி. இவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுசித்ரா. இந்த தம்பதிக்கு 6 வயதில் தியா என்ற மகளும், 1½ வயதில் தக்ஷ் என்ற ஆண் குழந்தையும் உண்டு. சிறுமி தியா அங்குள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
வழக்கம்போல் சுசித்ரா தனது மகள் தியாவை பள்ளியின் பஸ்சில் ஏற்றி விடுவதற்காக கடந்த 9-ம் தேதி காலை வீட்டில் இருந்து அருகில் உள்ள தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றார். அப்போது அவர் 1½ வயது குழந்தை தக்சை கைகளில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அவர்கள் வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுமார் 40 அடி உயர தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று திடீரென கீழே விழுந்தது. அதிவேகமாக வந்த அந்த தேங்காய், சுசித்ராவின் கையில் இருந்த குழந்தை தக்சின் தலையில் பலமாக தாக்கியது. இதில் குழந்தையின் மண்டை ஓடு உடைந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு உடனடியாக மணிப்பாலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை தக்ஷ் பரிதாபமாக உயிரிழந்தான். குழந்தை உடலை பார்த்து பிரசாந்த் பூஜாரி, சுசித்ரா ஆகியோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. தேங்காய் தலையில் விழுந்து 1½ வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.