

நெலமங்களா,
நெலமங்களா அருகே மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா சிக்கமதுரே அருகே உத்திச்சிக்கனஹள்ளியை சேர்ந்தவர் விஜய்குமார் (வயது 48). இவரது மனைவி லட்சுமி தேவி என்கிற தேவம்மா(42). இந்த தம்பதிக்கு இந்திராணி என்ற மகள் இருக்கிறார். இந்திராணிக்கு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற 26-ந்தேதி மற்றும் 27-ந்தேதி திருமண விழா நடைபெற இருந்தது. இதனால் விஜய்குமாரும், அவரது மனைவியும் திருமண அழைப்பிதழ்களை உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் கொடுத்து வந்தனர்.
அதுபோல் நேற்று காலை இருவரும் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க பைக்கில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் நெலமங்களா அருகே மைலான ஹள்ளி பகுதியில் சென்றபோது அவர்களது பைக் மீது பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன்-மனைவி லாரியின் சக்கரத்தில் சிக்கினார். அதில் லட்சுமிதேவி உடல் நசுங்கி பலியானார். கணவர் விஜய்குமாரின் கால்கள் மீது லாரி ஏறி இறங்கியது. இதில் கால்கள் சிதைந்து அவர் படுகாயமடைந்தார். தனது கண்முன்னே மனைவி பலியானதை பார்த்தும், தனது கால்கள் சிதைந்த நிலையில் விஜய்குமார் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
தற்போது விஜய்குமார், நெலமங்களாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து பற்றி தகவல் அறிந்த நெலமங்களா புறநகர் போலீசார் லட்சுமிதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் இந்திராணி மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.