குளிக்க சென்றபோது நேர்ந்த சோகம்: ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்க சென்றபோது நேர்ந்த சோகம்: ஏரியில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி
Published on: 

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தருண் (வயது 12), புவன் (12), லிகித் (12). இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள வெவ்வேறு பள்ளிகளில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது பள்ளிகளுக்கு தசரா பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்கள் வீட்டில் இருந்தனர்.

இந்த நிலையில், பெற்றோர்கள் வழக்கம்போல் தங்களது வேலைகளுக்காக வெளியூர்களுக்கும், விவசாய தோட்டங்களுக்கும் சென்றுவிட்டனர். பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், சிறுவர்கள் 3 பேரும் அதே ஊரில் உள்ள சிக்ககெரே ஏரிக்கு குளிக்கச் சென்றனர். சிறுவர்கள் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது. எதிர்பாராதவிதமாக நீரின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

நீச்சல் தெரியாததால் 3 மாணவர்களும் நீரில் மூழ்கி அலறினர். அவர்களுடன் சென்றிருந்த சக நண்பர்கள், சிறுவர்கள் நீரில் மூழ்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஓடிச்சென்று பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்க மகளூரு தீயணைப்பு வீரர்கள், ஏரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நீரில் மூழ்கி பலியான தருண், புவன் மற்றும் லிகித் ஆகிய 3 மாணவர்களின் உடல்களையும் பிணமாக மீட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com