

ராய்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமூக விரோதிகளால் பட்டை உரிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் 500-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை ‘மர அறுவை சிகிச்சை’ மூலம் காப்பாற்ற வனத்துறை தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மற்றும் காரியாபந்த் மாவட்டங்களில் அமைந்துள்ள உதந்தி சீதானதி புலிகள் காப்பகத்தின் கர்கா கிராமப் பகுதியில் உள்ள காடுகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வனத்துறையினர் அண்மையில் மீட்டனர். அப்போது, அங்குள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வேண்டுமென்றே பட்டைகள் சீவப்பட்டு, அவை காய்ந்து போகும் நிலையில் விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இறக்கும் தருவாயில் உள்ள இந்த மரங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக, இன்று வியாழக்கிழமை அன்று வனத்துறை ஒரு பிரத்யேக மீட்புத் திட்டத்தைத் தொடங்கியது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், ‘மரங்களின் மருத்துவர்’ என்று அழைக்கப்படுபவருமான விஜய் நிஷாந்த் என்பவரின் நிபுணத்துவ உதவி நாடப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சையின் போது, மரங்களின் சேதமடைந்த பகுதிகளில் பூஞ்சை காளான் நாசினிகள் மற்றும் இயற்கை ஊட்டச்சத்துக்கள் தடவப்பட்டு, அதன் திசுக்கள் மீண்டும் வளர வழிவகை செய்யப்படுகிறது. ஆரோக்கியமான கிளைகளின் பட்டைகள் சேதமடைந்த பகுதிகளில் ஒட்டப்பட்டு, பிளாஸ்டிக் தாள்களால் அவை பாதுகாப்பாக மூடப்படுகின்றன.
இதன் மூலம் மரங்களுக்கு தேவையான நீர் மற்றும் உணவுச் சுழற்சி மீண்டும் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலையும், காடுகளையும் பாதுகாக்க சத்தீஸ்கர் வனத்துறை எடுத்துள்ள இந்த மருத்துவ முயற்சிக்கு இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.