டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறல்; கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கைது

ஆனால், பூட்டியிருந்த வாசல் கதவுகளின் மீது ஏறி, அவர்கள் மறுபுறம் சென்றனர்.
டெல்லி
Published on: 

புதுடெல்லி

டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறலில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (எஸ்.ஐ.ஆர்.), ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தத்தில், 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ள சூழலில், உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

எனினும், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார், மற்ற இரு ஆணையாளர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.

போராட்டம்

இந்த நீக்கத்திற்கு அவரது அரசு சார்பு நடவடிக்கைகளே காரணம் எனக்கூறி எதிர்க்கட்சியினர், அவரை பதவி விலக வலியுறுத்தி வருகிறார்கள். தவிர, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதேபோன்று சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதே விவகாரம் தொடர்பாக, கடந்த 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தேசிய இந்திய மாணவர் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த நிலையில், போராட்டம் நடத்துவதற்கான இடம் இதுவல்ல என கூறி, ஜந்தர் மந்தரை டெல்லி போலீசார் மூடிவிட்டனர். ஜந்தர் மந்தரில் யாருக்கும் போராட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அவசர வழக்கு

இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, இந்திய தேசிய மாணவர்கள் அமைப்பு தலைவர் வினோத் ஜாக்கர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 10-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அந்நிய சக்திகள் ஊடுருவி இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

செய்தி தொடர்பாளர்கள்

இந்நிலையில், டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா ஆகிய இருவரும் வருகை தந்தனர்.

எனினும், போராட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதிக்கு வந்த அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம், இந்த பகுதியில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

அவர்களுடன் 10-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தியபடி வந்தனர். ஆனால், பூட்டியிருந்த வாசல் கதவுகளின் மீது ஏறி, அவர்கள் மறுபுறம் சென்றனர். அவர்களும் இதேபோன்று நடந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட செய்தி தொடர்பாளர்கள் இருவர் மற்றும் அவர்களுடன் சென்ற அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com