கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
கடும் அமளி.. டெரிக் ஓ பிரையன் எம்.பி. குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
Published on

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த வாலிபர்கள், வண்ணப் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாராளுமன்ற தாக்குதல் நினைவு நாளில் அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக பாதுகாப்பு பணியாளர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயக கோவிலாக கருதப்படும் நாடாளுமன்றத்திற்குள் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையே, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனை அவையில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். ஆனால், அவைத்தலைவரின் உத்தரவை ஏற்க மறுத்த டெரிக் ஓ பிரையன் அவையை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து பிற எம்.பி.க்களுடன் முழக்கங்கள் எழுப்பினார்.

எனவே, ஒழுங்கற்ற நடத்தைக்காக அவரை வெளியேற்றும்படி பாதுகாவலர்களுக்கு அவைத்தலைவர் உத்தரவிட்டார். அத்துடன் அவரை நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com