

புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நரேஷ், லலித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் தெளிவாக இல்லை என்றும், அவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை மீண்டும் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 11ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.