மாம்பழம் சாப்பிட்ட இரு சிறுமிகள் உயிரிழப்பு.! - அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் மாம்பழம் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாம்பழம் சாப்பிட்ட இரு சிறுமிகள் உயிரிழப்பு.! - அதிர்ச்சி சம்பவம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியை சேர்ந்தவர் வைஜிநாத். இவரது மனைவி இந்துமதி. இந்த தம்பதியினர், ஹைதரபாத்தில் தங்கி வேலைசெய்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்களது உறவினர் ரேணுகா என்பவர், சமீபத்தில் நாராயணகுடாவில் உள்ள ஜல்மண்டலி அலுவலகம் அருகே மாம்பழங்கள் வாங்கி வந்துள்ளார். இந்த மாம்பழத்தை இந்துமதியும், அவரது 4 மகள்களும் சாப்பிட்டுள்ளனர்.

மாம்பழம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வயிற்று வலி, வாந்திப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 பேரும் கச்சிகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜிநாத்தின் 3-வது மகள் புவனேஸ்வரி (வயது 17) திங்கள்கிழமையன்று உயிரிழந்தார். மறுநாள் இளைய மகள் சந்தியா (10) இறந்தார். இந்துமதி மற்றும் மற்ற 2 மகள்களின் உடல்நிலை சீராக உள்ளது.

இந்த சோக சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், நாராயணகுடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாப்பிட்ட மாம்பழத்தின் மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com