

புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. எனினும், நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, பாரசீக வளைகுடாவில் இருந்து இந்திய கொடியுடன் கூடிய 2 எல்.பி.ஜி. சரக்கு கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி நோக்கி புறப்பட அனுமதிக்கப்பட்டன. பைன் கியாஸ் மற்றும் ஜெக வசந்த் ஆகிய அந்த 2 சரக்கு கப்பல்களும் எல்.பி.ஜி. எனப்படும் கியாஸ் சிலிண்டர்கள் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொண்டுள்ளன. அவை இரண்டும் இன்று மதியம் ஒன்று சேர்ந்ததுபோல், ஈரானின் லராக் மற்றும் காசிம் தீவுகளுக்கு இடையே பயணித்து சென்றன.
இந்நிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துக்கான அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலில், 92,612 டன் எல்.பி.ஜி.யுடன், இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியை இன்று மாலை கடந்துள்ளன. அந்த கப்பல்களில் முறையே 27 மற்றும் 33 இந்திய பணியாளர்கள் உள்ளனர். அவை இரண்டும் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வருகிற 26 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு இடையே அவை துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
இதற்கு முன்பு, எல்.பி.ஜி.யுடன் ஷிவாலிக் கப்பல் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு கடந்த 16-ந்தேதி வந்து சேர்ந்தது. அடுத்த நாள், நந்தா தேவி என்ற மற்றொரு கப்பல் எல்.பி.ஜி.யுடன், குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு, பாதுகாப்பாக வந்தடைந்தது.
இதன்பின்னர் ஜெக லாட்கி என்ற எண்ணெய் கப்பல் 80,886 டன் கச்சா எண்ணெய்யுடன் 18-ந்தேதி குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. ஜெக பிரகாஷ் என்ற கேசோலின் ஏற்றிய கப்பல் பாதுகாப்பாக ஜலசந்தியை கடந்தது. அது தான்சானியா நோக்கி செல்கிறது. இதனால், மொத்தமிருந்த 28 கப்பல்களில் 4 கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்து உள்ளன. மீதமுள்ள 24 கப்பல்களில் 2 கப்பல்களுக்கு தற்போது அனுமதி கிடைத்து அவை பயணித்து வருகின்றன.