

புதுடெல்லி,
தேர்தல் கமிஷனால் முடக்கிவைக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷனில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 5 கட்டங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், ஈபிஎஸ், ஓபிஎஸ் - டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தில் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர்.
இன்று மாலை, எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் செய்தார். இந்த நிலையில், இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாதங்கள் இருப்பின் இரு தரப்பும் திங்கள்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இருப்பினும், ஒருவாரத்திற்குள் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.