சிறையில் இருந்து தப்பிய கைதிகள்; விஜயதசமி கொண்டாட்டத்தின்போது பரபரப்பு

தப்பியோடிய கைதிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பனிகோலி பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த ஜனவரி 4ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் உள்பட 2 பேரை கொள்ளை கும்பல் சுட்டுக்கொன்றது.
இந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பீகாரை சேர்ந்த ராஜா சஹானி, சந்திரகாந்த் குமார் ஆகிய 2 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து கட்டாக் மாவட்டம் சவுத்வார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சவுத்வாரி சிறையில் நேற்று விஜயதசமி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அப்போது, சிறைத்துறை அதிகாரிகள், போலீசார், கைதிகள் என அனைவரும் விஜயதசமி கொண்டாட்டத்தில் மும்முரமாக இருந்தனர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய ராஜா , சந்திரகாந்த் இரவு நேரத்தில் சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிந்த சிறைத்துறையினர், போலீசார் தப்பியோடிய கைதிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






