டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை, உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு) மாணவர்கள் கல்வி கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜே.என்.யு. (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்) மாணவர்களை சந்தித்தேன். கல்வி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 78 நாட்களுக்கு மேல் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்பவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் வந்த குண்டர்கள், சபர்மதி விடுதிக்குள் புகுந்து நடத்திய தாக்குதலை ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று மாணவர்கள் விவரித்தனர்.

இந்த நிமிடம் வரை, தாக்குதலுக்கு உள்ளானவர்களை துணைவேந்தர் சந்திக்கவே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களை தாக்கிய குண்டர்கள் யார் என தெரிந்தும் இதுவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை. குண்டர்களை பாதுகாப்பவர்கள், நாட்டை எப்படி பாதுகாப்பர் என நினைக்கையில் அச்சமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com