

மும்பை,
மராட்டிய சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், பா.ஜனதா-அஜித்பவார் கூட்டணி அரசு இருப்பதால், தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், மும்பை விமான நிலையம் அருகே உள்ள லலித் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர், முடிவை மாற்றிக்கொண்டு, மும்பையில் ஜூகு பகுதியில் உள்ள ஜே.டபிள்யூ. மாரியட் ஓட்டலில் தங்க வைத்துள்ளனர். தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க அதே ஓட்டலில் பா.ஜனதா தலைவர்களும் அறைகளை முன்பதிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மும்பை புறநகர் பொவாயில் உள்ள ரினைசன்ஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுடன் தங்கி உள்ள சரத்பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.
சரத்பவாரை மறுமலர்ச்சி நாயகர் என்று அவரது கட்சி செய்தித்தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கேற்ப, மறுமலர்ச்சி என்ற அர்த்தம் கொண்ட ஓட்டலிலேயே சரத்பவார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக் கப்பட்டுள்ளதை 3 ஓட்டல்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாருடன், ரிசர்வ் போலீசாரும் ஓட்டல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் மஞ்சுநாத் சிங்கே கூறுகையில், லலித் மற்றும் ஜே.டபிள்யு. மாரியட் ஓட்டலில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டலுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சோதித்து, அதில் யார் செல்கிறார்கள் என்பதை விசாரித்து தான் உள்ளே அனுப்புகிறோம் என்றார்.
இதேபோல ஓட்டல் காவலாளிகளும் தீவிர சோதனைக்கு பிறகு தான் வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி வருகின்றனர்.