

திருவனந்தபுரம்,
கேரளம் மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா. இவர் எக்சலாஜிக் சொல்யூசன்ஸ் என்ற தனி யார் நிறுவனத்தை நடத்தி வந்தார். கேரளத்தை சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனத்துக்கும், வீணாவின் எக்ச லாஜிக் சொல்யூசன்ஸ் நிறுவனத்துக்கும் எதிராக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குப்பதிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஆலோசனை சேவை என்ற பெயரில் எக்சலாஜிக் நிறுவனத்துக்கு கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் முறைகேடாக ரூ.2 கோடியே 78 லட்சம் வழங்கி உள்ளது. இந்த 2 நிறுவனங்களும் குற்றச்செயல்கள் மூலம் பணம் திரட்டியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. ஏற்கனவே வீணாவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த வழக்கின் விசாரணைக்காக வீணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதை வீணா பெற்றுக் கொண்டார். கொச்சியில் உள்ள அமலாக்கத்துறையின் மண்டல அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறும், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தி டம் இருந்து எதற்காக பணம் பெற்றார்? என்பதை உறுதி செய்யும் வகையில் ஆவணங்களுடன் வர வேண்டும் என்றும் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்தநிலையில் வீணா தனக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதில் அளிக்கும் வகையில், அமலாக்கத்துறைக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அதில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று கூறியுள்ளார். இதனால் அவரிடம் வேறொரு நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.