சட்டையில் பட்டன் போடாமல் ஆஜரான வக்கீல்... சிறைத்தண்டனை விதித்த கோர்ட்டு

கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் அங்கி அணியாமலும் சட்டை பட்டன்கள் போடாமலும் வந்ததாக கூறப்படுகிறது.
லக்னோ,
உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள உள்ளூர் கோர்ட்டு ஒன்றில் அசோக் பாண்டே என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் வழக்கு ஒன்றில் கோர்ட்டில் ஆஜரான அசோக் பாண்டே, வழக்கறிஞர் அங்கி அணியாமலும் சட்டை பட்டன்கள் போடாமலும் வந்துள்ளார்.
அவரை வெளியே போக சொன்ன நீதிபதிகளை 'குண்டர்கள்' (ரவுடி) என்று வசைபாடினார். எனவே, அவர் மீது ஐகோர்ட்டு தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில், நீதிபதிகள் விவேக் சவுத்ரி, பி.ஆர்.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, வக்கீல் அசோக் பாண்டேவுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், ரூ.2 அயிரம் அபராதமும் விதித்துள்ளது. அபராதம் செலுத்தாவிட்டால், கூடுதலாக ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
லக்னோ மாஜிஸ்திரேட்டு முன்பு சரண் அடைய அவருக்கு 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. வக்கீல் தொழில் செய்ய ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ''குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை, வக்கீலின் கடந்தகால செயல்பாடுகள் ஆகியவற்றை கருதி, முன்மாதிரியான தண்டனை அளிப்பது அவசியம்'' என்று நீதிபதிகள் கூறினர்.






