நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் மிக நெருங்கிய கூட்டாளியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவருமான சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்  கூட்டாளி இந்தியாவுக்கு நாடு கடத்தல்
Published on

மும்பையின் பைக்குல்லா பகுதியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சலீம் டோலா (வயது 59), வாலிப வயதிலேயே குற்றச் செயல்களில் ஆர்வம் காட்டினார். மும்பை நிழல் உலகை ஆட்டிப்படைத்த தாவூத் இப்ராகிமின் வலது கரமான தாதா சோட்டா ஷகீலுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சோட்டா ஷகீல் மூலமாகவே தாவூத் இப்ராஹ்மின் ‘டி-கம்பெனி’க்குள் சலீம் டோலா நுழைந்தார். ஆரம்பத்தில் குட்கா மற்றும் புகையிலை கடத்தலில் தாவூத்துக்கு உதவியாக இருந்த இவர், தனது விசுவாசத்தால் மிக விரைவிலேயே தாவூத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக மாறினார்.

இதையடுத்து தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்குத் தப்பியோடிய பிறகு, அவரது சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு சலீம் டோலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் மும்பையில் 100 கிலோ பெண்டானில் போதைப்பொருளுடன் சிக்கி, பின்னர் ஜாமீனில் வெளிவந்து வெளிநாட்டுக்கு தப்பினார். அங்கிருந்தபடியே இந்தியா, துபாய் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை இணைக்கும் பிரம்மாண்டமான போதைப்பொருள் சங்கிலியை உருவாக்கி நிர்வகித்து வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த இவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போலி அடையாளங்களுடன் பதுங்கியிருப்பதாக இந்திய உளவுத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, துருக்கியின் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அந்நாட்டு போலீஸார் இணைந்து நடத்திய ரகசிய நடவடிக்கையில் சலீம் டோலா சிக்கினார்.

துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவர், நேற்று அதிகாலை ஒரு சிறப்பு விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் இந்தியா கொண்டு வரப்பட்டார். தற்போது டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு சலீம் டோலாவின் மகன் தாஹிர் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகியோரை துபாயிலிருந்து இந்திய அதிகாரிகள் நாடு கடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது சலீம் டோலாவும் பிடிப்பட்டிருப்பது தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனிக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. டெல்லி விசாரணைக்குப் பிறகு, மும்பை குற்றப்பிரிவு போலீஸார் இவரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com