

பெங்களூரு,
இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும். தற்போது 704 உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 70 லட்சம் பெண்கள் உதவி மையங்கள் மூலம் உதவிகளை பெற்றுள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் நீதி கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. அந்த மையங்கள் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவிகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டில் உள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு 'ஸ்மார்ட்' உபகரணங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் போஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி பாலூட்டும் தாய்மார்கள் உதவிகளை பெற்றுள்ளனர். போஷன் திட்டம் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை 40 கோடி பிரசார இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தால் நாட்டில் ஆண்-பெண் பாலின விகிதம் 914-ல் இருந்து 937 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 300 பெண்கள் உதவி மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிரிதி இரானி கூறினார்.