‘அசானி’ புயல் முன்னேற்பாடுகள்: தயார்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படைகள்...!!

ஆந்திராவில் ‘அசானி’ புயல் இன்று கரையை கடக்க வாய்ப்புள்ளதால் தேசிய பேரிடர் மீட்புப்படைகள் தயார்நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று (புதன்கிழமை) பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று தெரிகிறது. அத்துடன் மேற்கண்ட மாநிலங்களிலும், மேற்கு வங்காளத்தின் தென்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அசானி புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்தார். மத்திய அமைச்சகங்களும், மத்திய மீட்பு படைகளும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்துவர வேண்டும் என்றும், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை அளிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா உத்தரவிட்டார்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் 7 குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒடிசாவில் 17 குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 17 குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com